×

செஞ்சடை வேடுவன்

சிவபெருமான் வேடுவனாகத் தோன்றி அன்பர்களுக்கு அருள்பாலித்ததை அநேகத் தலபுராணங்கள் குறிக்கின்றன. ஊழிக்காலம் முடிந்து உலகைப் படைக்கத் தொடங்கிய வேளையில் சிவபெருமான் வேடனாகத் தோன்றி பிரம்மனுக்கு அருள்புரிந்தான் என்று குடந்தைப் புராணம் கூறுகிறது. திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோருக்கு வழிகாட்டவும், பகைவர்களை அழிக்கவும் வேடனாகத் தோன்றியதாகத் தலபுராணங்கள் கூறுகின்றன. பெருமான் வேடனாகத் தோன்றி அருள்பாலித்த வரலாறுகள் சிலவற்றைக் கண்டு மகிழலாம்.குடந்தை வேடன்திருக்குடந்தை கும்பேஸ்வரர் ஆலயத்தின் பிரகாரத்தில் வடகிழக்கு முனையில் ‘கிராதமூர்த்தி’ எனும் பெயரில் சிவபெருமான் தனிச்சந்நதியில் எழுந்தருளியுள்ளார். மேற்கரங்களில் மானும், மழுவும் இருக்க கீழ்க்கரங்களில் வில்லும், அம்பும் உள்ளன. இவரே ஆதிமூர்த்தியாவார். இவர் இங்கு எழுந்தருளியிருப்பதற்கான காரணத்தைக் குடந்தைப் புராணம் கூறுகிறது. அதன்படி, ஒரு பிரளய காலத்தின் முன்பாகச் சிவனுடைய ஆணைப்படி பிரம்ம தேவன் படைப்பிற்கு மூலகாரணமான ஜீவவித்துக்களை ஒரு குடத்தில் இட்டு அதை அமுதத்தால் நிறைத்து மேலே மாவிலையையும் தேங்காயையும் வைத்து பூணூல் அணிவித்து தர்பைக் கூர்ச்சம் இட்டு பூரண கும்பமாக்கினான். அதைச் சிவமாகவே போற்றி வழிபட்டான்.சில நாட்களில் பிரளயம் ஏற்பட்டு எங்கும் வெள்ளக் காடாகி விட்டது. அந்த வெள்ளத்தில் அமுத குடம் அங்கும் இங்குமாக மிதந்துகொண்டிருந்தது. சில நாட்கள் கழிந்தன. வெள்ளம் வடியத் தொடங்கியது. பிரம்மன் ஜீவ வித்துக்களை இட்டு வைத்த பூரண கும்பம் ஒரு மணல் திட்டில் தங்கியது. சிவபெருமான் மீண்டும் உலக உற்பத்தியைத் தொடங்க எண்ணினார். வில்லும் அம்பும் ஏந்திய வேடனாக வெளிப்பட்டார். அவர் வில்லை வளைத்து அமுது குடத்தை அம்பால் அடித்தார். அது சிதறி ஆங்காங்கு விழுந்தது. பூணூல், மாவிலை, தேங்காய், கூர்ச்சம் ஆகிய நான்கும் நான்கு இடங்களில் வீழ்ந்து லிங்கமாயின. குடம் உடைந்து அமுதம் மணலில் கலந்தது. பிரம்மன் அமுதத்துடன் பானை ஓடுகளுடன் கூடிய வெண்மணலைப் பிசைந்து சிவலிங்கமாக்கினான். வேத, ஆகம விதிப்படி பூஜைகள் செய்தான். அந்த லிங்கமே அருள்மிகு கும்பேஸ்வரராகக் குடந்தையில்  அமைந்துள்ளது. சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு பிரம்மனுக்கு அருள்புரிந்ததுடன் படைப்புத் தொழியையும் இயற்றுக என்றார்.இறைவன் வேடனாக நின்று பாணம் கொடுத்த இடம் இந்நாளில் பாணந்துறை என்று அழைக்கப்படுகிறது.அங்கு பாணபுரேசர் ஆலயம் உள்ளது. கும்பம் இருந்த உரி விழுந்த இடத்தில் சோமேசர், வில்லம் விழுந்த இடத்தில் நாகேசர், தேங்காய் விழுந்த இடத்தில் அபிமுத்தேசர் பூணூல் விழுந்த இடத்தில் கௌதமேசர் என்னும் சிவலிங்கங்கள் உண்டாயின.குடந்தை கும்பேசர் ஆலயத்திலுள்ள கிராத மூர்த்தி வேட்டுவகோலத்தில் இல்லை. சிற்ப நூல்களில் சொல்லப்பட்ட திரிபுராந்தகர் கோலத்தில் உள்ளது.சம்பந்த வேடன்மயிலாடுதுறைக்கு கிழக்கே 8 கி.மீட்டர் தொலைவில் உள்ள தலம் விளநகர். இறைவன்: உசீரவனேசுவரர். அம்பிகை: வேயுறுதோளி, திருஞானசம்பந்தர் கடைமுடி முதலிய பலதலங்களை வணங்கி மயிலாடுதுறைக்கு வரும் வழியில் இங்கு வந்தார். அப்போது காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. அப்பொழுது சிவபெருமான் ஒரு வேடனாகத் தோன்றி அவருக்குத் துறையைக் காட்டி கரையேற்றியபின் ஞான உபதேசம் செய்தார் என்று புராணம் கூறுகிறது. இதையொட்டி சிவபெருமான் துறைகாட்டும் வள்ளல் என்று அழைக்கப்படுகின்றார்.சுந்தர வேடன்சேரநாட்டு யாத்திரை மேற்கொண்ட சுந்தரமூர்த்தி சுவாமிகள் அங்கு சில நாட்கள் தங்கியிருந்தபின் தனது தோழரான சேரமான் பெருமாள் அளித்த பெருஞ்செல்வத்துடன் திருவாரூருக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். அவர் திருமுருகன் பூண்டி எனும் தலத்திற்கு வரும் வேளையில் அவரிடம் திருவிளையாடல் புரியக் கருதிய சிவபெருமான் ஆறலைக் கள்வனாக வேட வடிவத்துடன் அவர் முன்பு தோன்றினார். பூத கணங்களும் அவருடைய வேட்டுவப் படைகளாகத் தோன்றின. சிவபெருமான் சுந்தரரை வழிமறித்து அவரிடமிருந்து பொருளைக் கொள்ளை கொண்டார்.சுந்தரர் வருந்தி, திருமுருகன்பூண்டி முருகநாத சுவாமி ஆலயத்துள் சென்று ‘கொடுகுவெஞ்சிலை’ என்று தொடங்கி ஆறலைக்கும் கொடிய கள்வர்கள் வாழும்  இந்த முருகன் பூண்டி நகரில் ‘எத்துக்கிருந்தீர் எம்பிரான் நீரே’ என்று மகுடமிட்ட, திருப்பாசுரத்தை அருளிச் செய்தார்.சிவபெருமான் உவந்து அவருக்கு முன்னே தோன்றி தாம் கவர்ந்த பொருட்களைத் திருப்பி அளித்தார். சுந்தரர் மகிழ்வுடன் திரும்பினார்.திருமுருகன் பூண்டி ஆலயத்தில் வேடுவனாக வந்த சிவபெருமானின் திருவுருவமும் அவருக்கு அருகில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் இரண்டு திருவுருவங்களும் உள்ளன. இவற்றில் ஒன்று பொருளைப் பறிகொடுத்தத் துன்ப நிலையிலும், மற்றது பொருளைத் திரும்பப் பெற்ற மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் நிலையிலும் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.சிவபெருமான் வேடுவனாகத் தோன்றி சுந்தரரிடம் பொருளைக் கவர்வது, பாடலைக்கேட்டு மகிழ்ந்து, மீண்டும் அளிப்பது ஆகியன ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது.இவ்வரலாற்றை ‘சுந்தரர் வேடுபறி’ என்ற ஐதீக நாடக நூல் விளக்குகிறது.குருகாவூர் சுந்தர வேடன்இந்நாளில் திருக்களாவூர் என்றழைக்கப்படும் திருக்குருகாவூர் தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இவ்வூருக்கு வடகிழக்கில் சுந்தரர் தங்கியிருந்தபோது சிவபெருமான் அந்தணர் வடிவில்  சென்று அவருக்குத் தயிர்சாத மூட்டையை அளித்தான். பிறகு வேட வடிவில் வந்து ஆலயத்திற்கு வழிகாட்டி விட்டு மறைந்தார். சுந்தரர் ‘வேடனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே’ என்று அருளிச் செய்துள்ளார். சிவபெருமான் வேட வடிவில் வந்த இடம் இந்நாளில் வேட்டங்குடி என்று அழைக்கப்படுகிறது. வேடமூர்த்தியின் திருவுருவம் ஆலயத்தில் உள்ளது.மாணிக்க வேடன்மாணிக்க வாசகருக்குச் சிவபெருமான் வேடனாக வந்து காட்சி தந்ததாக வரலாறு இல்லை. ஆனால் அவர் சிவபெருமானின் வேடவடிவத்தைப் பல இடங்களில் குறித்துப் போற்றியுள்ளார்.கடலில் சுறாவைப் பிடிக்க வந்ததைக் ‘கேவேடராகிக் கெளிறதுபடுத்தும்’, என்றும், சாத்தம் புத்தூரில் வேடனுக்கு ஆயுதங்கள் அளித்ததை ‘சாத்தம் புத்தூரில் ‘விற்பொருவேடர்க்கீந்த விளைவும்’ என்றும், வேட்டுவக் கோலத்துடன் உமையவளோடு கூடியிருந்ததைக் ‘கிராத வேடமொடு கிஞ்சுக வாயவன் விராவு கொங்கை நல்தடம் படிந்தும்’ என்றும், கானில் வேடனாய்த் திரிந்ததை வேடுவான் வேண்டுருக்கொண்டு காடதனில் கரந்த வள்ளமும்’ என்றும், அருளிச் செய்துள்ளார். திருவாசகத்தில் இன்னும் பல இடங்களில்  இறைவனின் வேடுவகோலம் சிறப்புடன் ேபாற்றப்படுகிறது.பூசை. அருணவசந்தன்…

The post செஞ்சடை வேடுவன் appeared first on Dinakaran.

Tags : Hunter ,Shiva Peruman ,
× RELATED சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’